பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ்கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தாக்கல் செய்துள்ள மனுவில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரசாரம் செய்து வருகிறார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி மதக் கலவரத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவில் பிரதமரின் பெயரை சேர்த்திருப்பதால் பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.