கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி


கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
x

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் தேங்காதவாறு ரூ.17 கோடி மதிப்பில் ஜி.எஸ்.டி. சாலையொரம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் குறுக்கே ராட்சத பொக்லைன் ஏந்திரம் மூலம் பள்ளம் தோண்டி நவீன முறையில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

இதனால் நேற்று மதியம் 1 மணியிலிருந்து சென்னை- திருச்சி மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது.

மேலும் போக்குவரத்து நேரிசலில் சென்னை நோக்கி சென்ற சில ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி உரிய நேரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்ல முடியாமல் நோயாளிகளும் அவதிப்பட்டனர். தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் படையெடுத்தனர்.

இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் சுமார் 2 கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு வாகனங்கள் ஊர்வலம் போல அணிவகுத்து நின்ற காட்சிகளை காண முடிந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றபோதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story