தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலை சமாளிக்க நாளை சென்னையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்


தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலை சமாளிக்க  நாளை சென்னையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 29 Sept 2022 11:22 AM IST (Updated: 29 Sept 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால், கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையிலிருந்து நாளை 2050 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை தொடர்ந்து 4, 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

1-ந்தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிற நிலையில் அக்டோபர் 3-ந்தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. மேலும் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளும் விடுமுறை அளித்துள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். 30 மற்றும் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இருந்து 2050 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும். கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாசில் உள்ள பணிமனை ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து வெளியூர் செல்லக்கூடியவர்கள் பயணத்தை தொடங்குவதால் பல்வேறு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பஸ்கள் சென்னையில் இருந்து கூடுதலாக இயக்கப்படுகிறது. "நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 2050 சேர்ந்து மொத்தம் 4150 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம். பொதுமக்களின் தேவையை கருதி கூடுதலாகவும் இயக்க தயாராக உள்ளோம். கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க பகுதி வாரியாக பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

மழை பெய்யாவிட்டால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவது வெளியூர் பயணத்தை முடக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story