இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 25 Jan 2024 5:18 PM GMT (Updated: 25 Jan 2024 6:11 PM GMT)

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

இளையராஜாவின் மகள் பவதாரிணி (வயது 47). இவர் பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் 'மயில் போல' பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார். இந்த நிலையில் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளையராஜாவின் மகளான பவதாரிணி இன்று மாலை 5.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில், பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி அவர்கள், தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே இரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


Next Story