சட்டசபையில் காரசார விவாதம்: தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய யார் காரணம்? தி.மு.க. - அ.தி.மு.க. மாறிமாறி குற்றச்சாட்டு


சட்டசபையில் காரசார விவாதம்: தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய யார் காரணம்? தி.மு.க. - அ.தி.மு.க. மாறிமாறி குற்றச்சாட்டு
x

தமிழகத்தில் ‘நீட்' தேர்வு நுழைய யார் காரணம்? என்பது குறித்து காரசார விவாதம் நடந்தது. தி.மு.க. - அ.தி.மு.க. மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டது.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கே.பி.முனுசாமி:- கவர்னரின் உரை முழுமையாக இல்லை. அவர் சட்டசபைக்கு வரும்போது உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அவையில் அவர் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும்.

சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்திருக்கும் நேரத்தில், சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று கருதுகிறேன். அவரது உரை முழுமையாக தரப்படவில்லை. கவர்னர் உரையாற்றும்போது, முதல்-அமைச்சர் உள்பட யாராக இருந்தாலும் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்திருக்கக்கூடாது.

சபாநாயகர் அப்பாவு:- எனக்கும், முதல்-அமைச்சருக்கும் அன்று மைக் வழங்கப்படவில்லை. கவர்னர் விரும்பியதை பேசிய பிறகுதான் முதல்-அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தார். இந்தியாவுக்கே முன்மாதிரியாக இது அமைந்துள்ளது.

பேரவை விதி எண் 17-ஐ தளர்த்தி முதல்-அமைச்சர் பேச அனுமதி கேட்டார். அதன்படி, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விதி 286-ன்படி அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. இந்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கும்.

கே.பி.முனுசாமி:- சபாநாயகர் என்பவர் அரசியல் பேசக்கூடாது. ஒரு சார்பாக நடக்கக்கூடாது.

சபாநாயகர் அப்பாவு:- அப்படி எதுவும் நடக்கவில்லை.

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- தீர்மானத்தை கொண்டுவர நான் அனுமதி கொடுக்கவில்லை என்றால் தலைகுனிவு என்று சொல்கிறீர்கள். எதனால் தலைகுனிவு ஏற்பட்டது?.

சபாநாயகர் அப்பாவு:- இந்திய அரசியல் சட்டம் 163 (1) -ன்படி, அரசு எழுதிக் கொடுத்ததை வாசிக்கும் உரிமை மட்டுமே கவர்னருக்கு உண்டு.

அமைச்சர் கே.என்.நேரு:- உறுப்பினர் இங்கே ஏதோ ஒன்றை திட்டமிட்டு நடத்த முயற்சி செய்கிறார். அதை அனுமதிக்கக்கூடாது.

கே.பி.முனுசாமி:- ஏதோ திட்டம்போட்டு செயல்படுவதாக அமைச்சர் கூறுகிறார். எந்த திட்டத்துடனும் நாங்கள் வரவில்லை. அவை மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

சபாநாயகர் அப்பாவு:- 1998-ம் ஆண்டு இதே அவையில் என்ன நடந்தது?.

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென் மாநிலங்களுக்கு தேவையான அளவு காய்கறி விளையும் சூழல் இருக்கிறது. வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் தொகுதிகளில் காய்கறி விளைவிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில், அது கூடாது என்று கோரிக்கை வைத்தோம். தொழில் துறை அமைச்சரும் அதற்கு வாக்குறுதி தந்தார்.

ஆனால், தற்போது தொழிற்சாலை அமைப்பதற்காக 3,200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை கைவிட வேண்டும். மேலும், இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.34 லட்சம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நிலத்தை தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு:- உங்கள் ஆட்சி (அ.தி.மு.க.) காலத்திலும் இதேபோல் நிலம் எடுப்பு நடந்துள்ளது. கூடுதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நிலத்தை அப்படியே கொடுத்துவிட முடியாது. மேம்பாடு செய்து விற்பனை செய்ய வேண்டும். மின்சாரம், தண்ணீர், சாலை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அதனால், அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கே.பி.முனுசாமி:- விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையை மேலும் ரூ.25 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு:- அ.தி.மு.க. ஆட்சியில் 1½ மடங்குதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்பட்டனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:- ஒரு பக்கம் விவசாய நிலத்தை எடுக்க வேண்டாம் என்கிறார். மற்றொரு புறம் இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும் என்கிறார். விவசாயிகளை வஞ்சித்து இந்த அரசு நிலம் எடுக்காது.

அமைச்சர் பொன்முடி:- 2009-ம் ஆண்டு தமிழகத்தில் நுழைவுத்தேர்வே கூடாது என்று சட்டம் போட்டவர் கருணாநிதி.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- 'நீட்' தேர்வு எப்போது வந்தது?. அப்போது மத்தியில் யார் ஆட்சியில் இருந்தார்கள்?, அந்த கூட்டணியில் இருந்தவர்கள் யார்?.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- தமிழகத்துக்குள் 'நீட்' தேர்வை நுழையவிடாமல் தடுத்தவர் கருணாநிதி. ஜெயலலிதா இருந்தது வரை 'நீட்' தேர்வு வரவில்லை. யார் ஆட்சியில் நுழைந்தது. நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் 'நீட்' தேர்வு நுழைந்தது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'நீட்' தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது, தி.மு.க.வை சேர்ந்தவர்தான் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரியாக இருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- எங்களையும் மீறி அப்போது வந்தது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தது வரை 'நீட்' தேர்வு தமிழகத்துக்குள் நுழையவில்லை. உங்கள் ஆட்சியில்தான் வந்தது. நீங்கள் ஏன் தடுக்கவில்லை?.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அது வந்தது. கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டாமா?.

அமைச்சர் ஐ.பெரியசாமி:- தமிழகத்தில் நுழைவுத்தேர்வை அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை பெற்றவர் கருணாநிதி.

எடப்பாடி பழனிசாமி:- 'நீட்' தேர்வுக்கு எதிராக நாங்கள் வழக்கு தொடுத்தோம். தமிழகத்தில் 'நீட்' தேர்வு வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- காலாவதியான சட்டத்தின் மூலம் நீங்கள் (அ.தி.மு.க.) வழக்கு தொடுத்தீர்கள். 'நீட்' தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதை ஏன் நீங்கள் சொல்லவில்லை?.

எடப்பாடி பழனிசாமி:- அந்த வழக்கைகூட நடத்தாமல் நீங்கள் வாய்தா வாங்கி வருகிறீர்கள். 'நீட்' தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?. ஆரம்பம் முதல் இறுதி வரை நாங்கள் எதிர்த்து வருகிறோம். நடவடிக்கை எடுக்காதது போல் எங்கள் மீது குற்றம் சொல்வது சரியல்ல.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- காலாவதியான சட்டத்தின் மூலம் பொழுதுபோக்குக்காக நீங்கள் வழக்கு தொடுத்தீர்கள். நீங்கள் மசோதா நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியது திரும்பி வந்ததை ஏன் சொல்லவில்லை?.

எடப்பாடி பழனிசாமி:- தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைந்ததற்கு காங்கிரஸ் - தி.மு.க. தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, 'நீட்' தேர்வுக்கான வரைமுறை கொண்டுவரப்பட்டது. அதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க. ஆட்சியில் தான் 'நீட்' தேர்வு வந்தது.

உறுப்பினர் கே.பி.முனுசாமி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஆனது?. மொத்தம் 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. அப்படி என்றால், இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாக்குறுதி என்ன ஆனது?.

அமைச்சர் கே.என்.நேரு:- உங்கள் ஆட்சியில் செல்போன் கொடுப்பதாக சொன்னீர்கள். கொடுத்தீர்களா?.

கே.பி.முனுசாமி:- கடந்த தி.மு.க. ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டதா?.

சபாநாயகர் அப்பாவு:- 20 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி:- அரசு புறம்போக்கு நிலம் கையளவு இருந்தாலும் அதை மக்களுக்கு வழங்க தலைவர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:- உங்கள் ஆட்சியில் மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள். அது என்ன ஆனது?.

கே.பி.முனுசாமி:- 'நீட்' தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் பாக்கெட்டில் வைத்திருப்பதாக சொன்னீர்களே?. அது என்ன ஆனது?.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story