திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை - அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்


திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை - அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
x

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்

இந்து சமய அறநிலையத்துறை, தனது கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரியும் திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், கூடுதல் கமிஷனர்கள் திருமகள், ஹரிப்ரியா உள்பட அதிகாரிகள், கோவில் துணை கமிஷனரும், செயல் அதிகாரியுமான விஜயா, வன சரக அதிகாரி அருள்நாதன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் திருத்தணி முருகன் கோவிலுக்கு அமைக்கப்படும் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோவிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.


Next Story