இருக்கை ஒதுக்கீடு: சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? இருதரப்பினரும் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியதால் பரபரப்பு


இருக்கை ஒதுக்கீடு: சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா? இருதரப்பினரும் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியதால் பரபரப்பு
x

ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி

பல பிரச்சினைகளுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் நீடிக்கிறார். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

ஆனால் அதே சமயம் கட்சி பதவி தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவுவிடம்ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முன்கூட்டியே கடிதம் அளிக்கப்பட்டது.

சட்டசபை கூடுகிறது

இந்த இருதரப்பு கடிதங்களையும் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 17-ந் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது.

அன்றைய தினத்தில்தான் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பாரா? சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகில் இருக்கும் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர முடியுமா? என்பது தெரியவரும்.

இருதரப்பு கடிதம்

இருதரப்பினர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் சபாநாயகர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை சுட்டி காட்டியிருந்தார். மேலும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதுபற்றி தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அலுவலகத்தில் நேற்றுஒரு கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தை அரக்கோணம் எம்.எல்.ஏ.வும், அ.தி. மு.க.வின் சட்டமன்ற துணை கொறடாவுமான ரவி அளித்துள்ளார்.

புறக்கணிப்பு?

இந்த கடிதம் பற்றி அ.தி. மு.க. தரப்பில் கேட்டபோது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் சட்டசபையின் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

சட்டசபை கூடும்போது சபாநாயகர் என்ன மாதிரி முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அதிருப்தியில் சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருதரப்பினரும் தனித்தனியாக சபாநாயகரிடம் கடிதம் அளித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள வருகிற 17-ந் தேதியன்று, மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மற்றும் பலருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அதோடு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story