ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் வெளிநடப்பு


ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் வெளிநடப்பு
x

எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. 20 ஒன்றிய குழு உறுப்பினர்களையும், 2 மாவட்ட குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கியது எல்லாபுரம் ஒன்றிய குழு ஆகும். இவ்வாறு நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு சாதாரண ஒன்றிய குழு கூட்டம் என்பர். இக்கூட்டத்தில் பங்கேற்க வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 19 துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றிய குழு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் ஒன்றிய குழு கூட்டம் மன்ற வளாகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. துணை பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, போக்குவரத்து துறை, வேளாண்மை துறை, கல்வித்துறை ஆகியவற்றை தவிர மற்ற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க. கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

குறிப்பாக வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வராததற்கு, இது கண்டிக்கத்தக்க செயல் என்று கூறி கோஷம் எழுப்பினர். இதற்கு ஒன்றிய பெருந்தலைவர், துணைப் பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலெக்டரிடம் கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என உறுதி கூறினர். ஆனால், இதனை ஏற்காத ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தக் கூடாது. கூட்டத்தை ஒட்டு மொத்தமாக நாங்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம் என்று கூறி அனைவரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.


Next Story