தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தி.மு.க.வை சேர்ந்த தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 12 மணிக்கு தொடங்கப்பட்டது.

கூட்டம் தொடங்கிய உடன் மாவட்ட கவுன்சிலர்கள் வந்தனர். பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்காமல் பூட்டப்பட்டு ரகசியமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் குமார் பேசும்போது:-

இங்கு நடைபெறும் மாவட்ட குழு கூட்டம் வெளிப்படையாக நடைபெறாமல் ஏன் பூட்டிய அறையில் நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இனி வரும் காலங்களில் வெளிப்படை தன்மையுடன் மாவட்ட குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். வெளிப்படையான முறையில் கணக்கு வழக்குகளை தெரிவிக்க வேண்டும், பணிகள் வழங்கும் போதும், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதிலும், மாவட்ட குழு தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அவருக்கு ஆதரவாக மற்ற அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்களான அம்மிணி மகேந்திரன், பாண்டுரங்கன், சாந்திப்பிரியா, ஹேமாவதி என 4 பேரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கண்ட 5 அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்களும், தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story