தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் தொடக்கம்


தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் தொடக்கம்
x
தினத்தந்தி 5 Feb 2024 6:23 AM GMT (Updated: 5 Feb 2024 6:41 AM GMT)

தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, தரவுகளை சேகரித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக தூத்துக்குடி தொகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளது. தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்து பேசி வருகின்றனர்.

நாளை கன்னியாகுமரியிலும், 7-ம் தேதி மதுரையிலும், 8-ம் தேதி தஞ்சாவூரிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 9-ம் தேதி சேலத்திலும், 10-ம் தேதி கோவையிலும் 11-ம் தேதி திருப்பூரிலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இறுதியில் 21, 22, 23-ந்தேதிகளில் 3 நாட்கள் சென்னையில் முகாமிட்டு மக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்துகளை கேட்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்ததும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பொது மக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையாக இறுதி செய்யப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.


Next Story