ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி


ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 10 March 2024 8:24 AM GMT (Updated: 10 March 2024 8:28 AM GMT)

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தலைநகர் டெல்லியில் அம்மாநில சிறப்பு பிரிவு போலீசார், கடந்த மாதம் 15-ந்தேதி நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருளை 50 கிலோவுக்கு அதிகமாக பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அந்த 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ்நாட்டை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜாபர் சாதிக் குறித்த பின்னணியை, மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது அவர், தி.மு.க.வில் அயலக அணி சென்னை மேற்கு துணை அமைப்பாளராக இருந்ததும், ஏற்றுமதி நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழிலை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தன்னை தேடுவதை அறிந்ததும் ஜாபர் சாதிக் தலைமறைவானார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லியில் நேற்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி,

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்.

போதைப்பொருள் விவகாரத்தில் தி.மு.க.வை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணைபோகிறது. தி.மு.க.வின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தி.மு.க.வினர் தவறு செய்வது தெரியவந்தால் உடனடியாக கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கிறது. தி.மு.க. என்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாது. சட்டவிரோத நடவடிக்கையில் துணை போவோரை கட்சியில் வைத்திருக்கமாட்டோம்.

போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடன் ஜாபர் சாதிக்கை தி.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டோம். ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. பா.ஜ.க.வின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது' என்றார்.


Next Story