நாடாளுமன்ற தேர்தல்; தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்


நாடாளுமன்ற தேர்தல்; தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்
x
தினத்தந்தி 18 Feb 2024 10:15 PM GMT (Updated: 19 Feb 2024 1:02 AM GMT)

விண்ணப்பத்தை வாங்கி செல்வோர் அதை முறையாக பூர்த்தி செய்து மார்ச் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி மாலை 6 மணிக்குள் தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 22-ந் தேதி சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்போது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில், அடுத்தக்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப படிவங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்தை வாங்கி செல்வோர் அதை முறையாக பூர்த்தி செய்து மார்ச் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி மாலை 6 மணிக்குள் தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story