எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு


எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார்  - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
x
தினத்தந்தி 16 Feb 2024 5:01 AM GMT (Updated: 16 Feb 2024 5:34 AM GMT)

வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டினை எடுத்து தி.மு.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

2022-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024-ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்" என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும், எந்த

அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும் தனது டுவிட்டர் பதிவில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கொள்கையிலிருந்து தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து 14-02-2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது பேசிய என். தளவாய் சுந்தரம், 2024-ம் ஆண்டு முதல் தொடங்கி 2034-ம் ஆண்டில் முடிவடையும் 10 ஆண்டுகளுக்குள்ளான கிட்டத்தட்ட 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம்.

கமிட்டி அவற்றை பரிசீலனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனை மத்திய அரசிற்கு அனுப்பி, அதன் மூலமான எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் பார்க்கின்ற நிலை வரும்பொழுது, நாங்கள் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்கின்ற சூழ்நிலை உருவாகும்பொழுது, குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம் என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார்.

27 அமாவாசை என்று 2022-ல் கூறியது இப்போது 2034-க்கு சென்றுவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்தத் தீர்மானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து, தி.மு.க.வுடன் கைகோர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த தி.மு.க. என்கிற தீயசக்தியை எதிர்த்து புரட்சித் தலைவர் அவர்கள் கட்சியை தொடங்கினாரோ, எந்தத் தீயசக்தியை எதிர்த்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தி.மு.க.வுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016-ம் ஆண்டு முழங்கியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக தி.மு.க.விடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story