"எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் தலைவர்" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் தலைவர் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2023 1:57 PM IST (Updated: 17 Oct 2023 3:40 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் தலைவர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2½ ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை. எந்தவொரு திட்டமும் புதிதாக வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வந்தால்தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் வரும். நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும் தெரியவில்லை.

தி.மு.க. ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர். ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.கவின் தலைவர்.

நான் என்றைக்குமே அ.தி.மு.க.காரன்தான். எனது குடும்பமே அ.தி.மு.க குடும்பம்தான். எனவே எந்தவித குழப்பம் செய்தாலும் இங்கு எதுவும் நடக்காது. நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வீறுநடை போடுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெல்லும். அத்தனை மக்களும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். அதனை இவர்களால் தாங்க முடியவில்லை. அதனால் இப்படி குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதுபோல் சில்மிஷம் செய்து எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வில் இருந்து என்னை மட்டுமல்ல. யாரையும் பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story