மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எடப்பாடி பழனிசாமி-கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு வெற்றி பெற்றதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகளில் சாமி கும்பிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று 2-வது நாளாக ஆய்வை தொடர்ந்த அவர்கள், சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர்.
பின்னர் கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீரென வந்தனர். அவர்களை கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
எம்.பி.க்கள் அனைவரும் பொற்றாமரைகுளம் வழியாக கோவிலுக்குள் சென்றனர். அப்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டதால் அப்துல்லா எம்.பி. சன்னதிக்குள் செல்லாமல் பொற்றாமரை குளம் பகுதியில் நிற்பதாக தெரிவித்தார். அவருக்கு துணையாக நான் நிற்கிறேன் என்று கனிமொழி தெரிவித்து விட்டு அவரும் சன்னதிக்குள் செல்லாமல் வெளியே நின்றுகொண்டார்.
அதைத்தொடர்ந்து கனிமொழி, அப்துல்லா ஆகியோர் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வந்தனர். அப்போது எதிரே எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அந்த வழியாக வந்தனர். கனிமொழியும், எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு பரஸ்பரமாக வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூவிடம் நன்றாக இருக்கிறீர்களா? என்று கனிமொழி கேட்டார். அவர்களும் பதில் தெரிவித்துவிட்டு சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர். கோவிலில் இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்.பி. கோவிலுக்குள் சென்றபோது தி.மு.க. அ.தி.மு.க. நிர்வாகிகள் பரபரப்பாக காணப்பட்டனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து சென்று பொற்றாமரைக்குளம் பகுதியில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அதன்பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு கோவிலுக்கு வெளியே உள்ள கடைகளில் வளையல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கனிமொழி எம்.பி. வாங்கி கொடுத்தார். அவருடன் கல்லூரி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.