தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாயை கொடுத்து வாக்குகளைப் பெற்று விடலாம் என்ற தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கண்டனம்

காலாகாலத்திற்கும் மக்கள், தங்களின் மகுடிக்கு மயங்கிக்கிடப்பார்கள் என்ற மமதையில் தி.மு.க. அரசு மிதந்து வருகிறது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும், மகளிர் உரிமைத்தொகை 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் நூற்றுக்கு நூறு சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று 2021 தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக தாய்மார்களை ஏங்க வைத்துவிட்டு, இப்போது, பாதிக்கும் குறைவான மகளிருக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாயை வழங்கி, நாக்கில் தேன் தடவும் வேலையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் பாதி தாய்மார்களுக்கு மேல் பட்டை நாமம் போட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. எனவே, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி விட்டு, தற்போது குறிப்பிட்ட மகளிருக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்குவதன் நோக்கம், விரைவில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

அத்தேர்தலில் மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது தான். நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகளிரின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்பது, மக்களுக்கு நன்றாகவே தெரியும். தி.மு.க.வின் பகல் கனவு பலிக்காது.

வெகு தொலைவில் இல்லை

பல சிரமங்களை அனுபவித்து வரும் தாய்மார்களில், பாதிக்கும் குறைவான மகளிருக்கு உரிமைத்தொகையை வழங்குவது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும். எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை மக்கள் உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story