காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் அருகே திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 58). இவர் வெள்ளைகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். துலுங்கும் தண்டலம் கிராமத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரி செய்ய துலுங்கும் தண்டலம் கிராமத்திற்கு மின் ஊழியர் பக்கிரிசாமி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு மின்மாற்றி மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி துடி துடித்தார். இதுகுறித்து ஆம்புலன்சு மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் வருவதற்குள் மின்ஊழியர் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் பக்கிரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.