செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிப்பு


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிப்பு
x

செந்தில் பாலாஜியை வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 33-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் வங்கி தொடர்பான சில ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு மீது மீண்டும் வாதிட அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை வரும் 22ம் தேதி பிற்பகலில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


Next Story