அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது


அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது
x

அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வீட்டிற்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அரியலூர்

பட்டாசு ஆலைகளில் ஆய்வு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வீட்டிற்கு 'சீல்'

திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பட்டாசு ஆலையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தா.பழூர் அருகே உள்ள நாயகனைபிரியாள் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு ஆலையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பட்டாசு ஆலையை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல்நாயகி என்பவர் பெயரில் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளது.

தையல்நாயகியின் கணவர் ஆறுமுகம் இந்த பட்டாசு ஆலையை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆய்வின்போது நாயகனைபிரியாள் செம்புலியப்பன், பாவாடைராயன் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு வீட்டிலிருந்து 2 பேர் சென்றதை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 92 மூட்டைகள் வெடிபொருட்களும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன், கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அதே வீட்டில் வைத்து பூட்டி 'சீல்' வைத்தனர்.

கைது

இதனைதொடர்ந்து அளவுக்கு அதிகமாக வெடி பொருட்களை வைத்திருந்த ஆலை நிர்வாகி ஆறுமுகம் மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பட்டாசு ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் அழிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story