மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை


மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை
x

மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60). விவசாயி. இவரது மனைவி மங்கம்மாள். இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. கன்னியப்பன் ராமாபுரத்தில் மனைவியுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் தனது நிலத்தில் சாமந்தி பூ பறிக்க மனைவியுடன் சென்றார். சாமந்தி பூக்களை பறித்த அவர் பகுதி அளவு பூக்களை இருசக்கரவாகனத்தில் எடுத்துகொண்டு வீடு திரும்பினார். பகுதி அளவு பூக்களை அங்கேயே வைத்து விட்டு மனைவியை பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்திருந்தார். நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது கணவர் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கன்னியப்பன் நிலத்தின் அருகே ராமாபுரம் சந்தைமேடு என்ற இடத்தில் பிணமாக கிடந்தார். மர்மநபர்கள் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருந்தனர்.

இதுகுறித்து அவரது மகன் பிரேம்ராஜ் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story