பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார் பிரதமர் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

தி.மு.க.வைப் பற்றியும், தி.மு.க. அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி, தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டி திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா? என்று தெரியவில்லை. பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர் மோடி.

நீட் தேர்வை எதிர்க்கிறோம் ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம்.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று தான் வகிக்கும் பதிவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களை கலைஞர் அப்படி வளர்க்கவில்லை.

கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்க தெரியாத பா.ஜ.க. வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை தராமல், வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story