பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்


பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்
x

பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 13 பேர் உடல் கருகி இறந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையில் நாட்டின் பல்வேறு பகுதியில் பட்டாசு விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டதன் விளைவாக இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ள சிவகாசி பட்டாசு கடைகளுக்கு பொதுமக்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது.

இதனால் வியாபாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். பலலட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் பட்டாசுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் தற்போது தொடர் விபத்துகள் மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வழக்கமாக வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்கி செல்லும் நபர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் கூட இல்லை.

இதுகுறித்து பட்டாசு வியாபாரி செல்சி டோனி கூறியதாவது, ஒரு சிலரின் தவறான நடவடிக்கையால் இது போன்ற துயர சம்பவம் நடக்கிறது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. அடுத்து வரும் நாட்களில் வெளியூர் மக்கள் சிவகாசிக்கு வந்து பட்டாசுகள் வாங்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் பட்டாசு விற்பனை நல்ல முறையில் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story