கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க தடை


கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க தடை
x

பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி,

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதுடன், பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதையொட்டி பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர குமரி மாவட்ட போலீசார் 1,200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித டிரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை. கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம் ஆகிய 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story