கமல்ஹாசன் பட நிறுவனம் பெயரில் 40 பேரிடம் மோசடி


கமல்ஹாசன் பட நிறுவனம் பெயரில் 40 பேரிடம் மோசடி
x
தினத்தந்தி 24 Sept 2023 3:00 AM IST (Updated: 24 Sept 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரில் 40-க்கு மேற்பட்டவர்களிடம் ரூ.10 லட்சம் வரை மோசடி நடந்து இருக்கிறது. நடிகர், நடிகைகளாக ஆசைப்பட்டு, அவர்கள் பணத்தை இழந்தது தெரியவந்து இருக்கிறது.

'ராஜ்கமல் பிலிம்ஸ்'

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரில் நடிகர்-நடிகைகள் தேவை என்றும், ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் 'இன்ஸ்டாகிராம்' வலைத்தளத்தில் விளம்பரம் வெளியானது. இதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம் 'டிஜிட்டல்' முறையில் பணம் பெறப்பட்டது. ஆனால் சினிமா வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பணத்தை இழந்தவர்கள் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். அப்போதுதான், கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி விளம்பரம் கொடுத்து மிகப்பெரிய பண மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது.

திட்டக்குடியில் கைது

இந்த மோசடி தொடர்பாக கமல்ஹாசனின் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 1-ந்தேதி புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுதாகரன் (வயது 26), புகழேந்தி (20) ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் திட்டக்குடியில் வைத்து கைது செய்தனர். அவர்கள் மோசடி செயலுக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு 'லேப்டாப்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சினிமா மோகம்

விசாரணையில், இவர்கள் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்கள், இளம்பெண்களை குறி வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியதும், சினிமா மோகத்தில் இவர்கள் மோசடியில் வலையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ரூ.10 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளனர். இவர்கள் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக செல்போன் சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றி உள்ளனர். இதில் 13 சிம் கார்டுகளை அழித்துள்ளனர். இவர்கள் மீது திருப்பூர், அடையார் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 3 மோசடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வரும் இது போன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story