திருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி


திருவொற்றியூரில் பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர் மோசடி
x

திருவொற்றியூரில் பெண்களிடம் பணமோசடியில் ஈடுப்பட்ட நிதி நிறுவன ஊழியர் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

திருவொற்றியூர் அஜாக்ஸ் அருகிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவ பெண்கள் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி 24 மாதம் தவணையாக பணத்தை கட்டி முடித்தனர். இதை அங்குள்ள ஊழியர் வசூல் செய்து அவர்களின் பாஸ்புக்கில் 'சீல்' வைத்து கொடுத்துள்ளார்.

கடன் வாங்கிய முழு பணத்தையும் கட்டிமுடித்த 17 பெண்கள் மீண்டும் அந்த நிறுவனத்தில் கடன் வாங்க சென்றபோது, "நீங்கள் 3 மாத தவணை கட்டவில்லை" என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது பாஸ்புக்கை காண்பித்தபோது, "அதுபற்றி எங்களுக்கு தெரியாது. எங்கள் கணக்கில் வரவில்லை" என அந்த நிதி நிறுவன மேலாளர் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், அந்த நிதி நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நிதி நிறுவன ஊழியர், பெண்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு பாஸ்புக்கில் சீல் மட்டும் வைத்து உள்ளார். ஆனால் அந்த பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரிந்தது. தலைமறைவான ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story