தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து மோசடி: வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து மோசடி: வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.564 கோடி மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை கடந்த 2011-12 மற்றும் 2014-15-ம் ஆண்டுகளில் இறக்குமதி செய்து, உயர்தர நிலக்கரி என கூறி சுமார் ரூ.564 கோடி அளவுக்கு மத்திய அரசை ஏமாற்றி முறைகேடு செய்ததாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனரான அகமது ஏ.ஆர்.புகாரி, தேசிய அனல் மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின் நிறுவனம் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.

இவ்வாறு முறைகேடு செய்த தொகையை அகமது ஏ.ஆர்.புகாரி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கூறி அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்தது.

இந்த வழக்கில் அகமது ஏ.ஆர்.புகாரியின் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.557 கோடியையும். அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் அகமது ஏ.ஆர். புகாரிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பி்ல் சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ் ஆஜராகி கூறியதாவது:-

இந்த வழக்கில் ரூ.550 கோடி இந்திய பணம் சட்டவிரோதமாக மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்திய எல்லை வழியாக கடத்தப்பட்டு உள்ளது.

இதன் பின்னணி குறித்து ஆழமாக விசாரிக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் அமலாக்கத்துறை சார்பில் கடந்தாண்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்நாடுகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு விசாரணைக்கு வெளிநாடு வாழ் இந்தியரான அகமது ஏ.ஆர்.புகாரி எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்கினால் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கை வீணாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகமது ஏ.ஆர்.புகாரி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏற்கனவே சிறப்பு கோர்ட்டு வழங்கிய நிபந்தனை ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும் சிறப்பு கோர்ட்டில் உள்ள இந்த வழக்கு ஆவணங்கள் மற்றும் ஜாமீன் உத்தரவை பதிவுத்துறை நகல் எடுத்து பத்திரப்படுத்த அறிவுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், "அகமது ஏ.ஆர்.புகாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதற்கு கீழ் கோர்ட்டு தகுந்த காரணத்தை கூறவில்லை.

மேலோட்டமாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே ஜாமீன் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.


Next Story