மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்


மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2024 5:53 PM GMT (Updated: 11 Feb 2024 8:04 AM GMT)

பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் அதில் உறுப்பினர் ஆகலாம் என்றும், அந்த செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, அதில் வரும் வீடியோக்களில் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.1000 வரை வருவாய் ஈட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை நம்பிய லட்சகணக்கான பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சத்தியானந்த் என்கிற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக எல் அண்டு டி ரோட்டில் கூடினர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், போலீசாரிடம் தங்களது நிறுவனத்திற்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், தற்போது போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வு கூட்டத்தில் உள்ளார். எனவே தங்களிடம் மனுவை வழங்கும்படியும், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று கூறியதுடன், போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து போலீசார் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மோசடியில் ஈடுபடுவதாக தனியார் நிறுவனம் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டநிலையில் தனியார் நிறுவனத்தின் அப்ளிகேஷன் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story