நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; ஜனாதிபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; ஜனாதிபதியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2023 1:43 PM IST (Updated: 27 Oct 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தார். அவரை கவர்னர், முதல்-அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் விமானநிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.

இந்நிலையில், 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 12.05 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டார்.

டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை வழியனுப்பி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் வந்தார். அப்போது, ஜனாதிபதி முர்முவை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள கடிதத்தில்,

ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காக்க வேண்டும். நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஏழை, பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு எதிரானது. முன்பு பிளஸ்2 மதிப்பெண்கள் மூலம் நடந்த சேர்க்கையால் மாநிலத்தில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையை பறித்துள்ளது. தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல், சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தை செயல்படுத்த முடியாமல் முடக்கியுள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story