3-வது நாளாக பலத்த மழை


தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப்பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர்

3-வது நாளாக தொடர்ந்து மழை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாகவும் பலத்த மழை கொட்டியது. நேற்று காலை முதல் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் லேசான தூறலுடன் மழை பெய்துகொண்டே இருந்தது.

இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

காவிரியில் தண்ணீர் திறப்பு

திடீரென மழை பெய்ததால் வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் கல்லணைக்கால்வாயில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது.

தற்போது மழை பெய்து வருவதால் கல்லணைக்கு மழைநீர் வரத்து அதிகரித்ததையடுத்து 6 நாட்களுக்குப்பிறகு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,304 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 10-ந்தேதி காவிரியில் 1,304 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கொள்ளிடத்தில் நேற்று 2046 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மி.மீட்டரில்) வருமாறு:-

திருவையாறு-31, நெய்வாசல் தென்பாதி-29, வெட்டிக்காடு-26, தஞ்சை-24, திருக்காட்டுப்பள்ளி-20, அய்யம்பேட்டை-18, பட்டுக்கோட்டை-13, வல்லம்-9, கல்லணை-7, பூதலூர்-6, ஒரத்தநாடு-5, அணைக்கரை-2, ஈச்சன்விடுதி-2, பேராவூரணி-1.


Next Story