கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான சாலைகள்
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் தனியார் பஸ் சிக்கியது
கோவை,
கோவையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இடி-மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக அவினாசி சாலை, திருச்சி சாலையில் மழைநீர் ஆறுபோன்று ஓடியது. அந்த தண்ணீர் அனைத்தும் கோவை ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள லங்கா கார்னர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியது.
அதுபோன்று கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. கோவை சிவானந்தாகாலனியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றது.
அப்போது பிரஸ் காலனியில் இருந்து காந்திபுரம் நோக்கி 35 பயணிகளுடன் தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் அந்த சுரங்கப்பாதை வழியாக சென்றபோது அங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றதால் சிக்கிக்கொண்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கயிறு கட்டி, பஸ்சுக்குள் இருந்த 35 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.