ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய விவகாரம் - பா.ஜ.க. நிர்வாகி கைது


ஹிஜாப் அணிந்த பெண் டாக்டரை மிரட்டிய விவகாரம் - பா.ஜ.க. நிர்வாகி கைது
x

வேளாங்கண்ணியில் வைத்து பா.ஜ.க. நிர்வாகி புவனேஸ்வர் ராமை போலீசார் கைது செய்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 24-ந்தேதி இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் என்பவர், சுப்பிரமணியை திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஜன்னத். இவர் கடந்த 24-ந்தேதி இரவு பணியில் இருந்த போது, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்ற நபரை சிகிச்சைக்காக சிலர் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவர்களுடன் வந்த புவனேஸ்வர் ராம் என்ற நபர், டாக்டர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும்? என்றும், மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? என்றும் கேள்வி எழுப்பிய புவனேஸ்வர் ராம், தனது செல்போன் மூலம் அதனை வீடியோ பதிவும் செய்துள்ளார்.

அவர் வீடியோ பதிவு செய்வதைத் கண்டித்த டாக்டர் ஜன்னத், தனது செல்போனில் அங்கு நடந்ததை பதிவு செய்தார். இந்த இரு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூண்டி மருத்துவர்கள், கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பெண் டாக்டரை மிரட்டிய புவனேஸ்வர் ராம் என்பவர் திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவராக இருந்து வருவது கண்டறியப்பட்டது. அவர் மீது கீழையூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வேளாங்கண்ணியில் வைத்து புவனேஸ்வர் ராமை போலீசார் கைது செய்தனர்.
Next Story