முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 2 Jun 2023 11:13 AM IST (Updated: 2 Jun 2023 12:09 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளையையும், தவறுகளையும் மறைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்குப் பயணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது அமைச்சர்களின் விதண்டாவாத பேச்சுக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் அடாத செயல்பாடுகளால் தூக்கம் கெட்டுவிடுவதாகக் கூறிய விடியா திமுக அரசின் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள், இதிலிருந்து தப்பிக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்தச் சுற்றுலாவின் மூலம் 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புலகாங்கிதம் அடைந்துள்ளார்.

பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் 1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் 3,233 கோடி என்று வந்தது. மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு 1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது ? விடியா அரசின் முதல்-அமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும்போது, 'கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005-லேயே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தமிழ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய CEO-க்களை அழைத்து, அவர்களிடமே இந்த முதலீடுகளை சுலபமாகப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதல்-அமைச்சர் சிங்கப்பூர்-ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம்.

2019-ஆம் ஆண்டு நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அங்குள்ள மருத்துவமனைகள், மின் கட்டமைப்பு, பண்ணை வளர்ப்பு, மின்சார வாகன தொழிற்சாலைகள் போன்றவற்றைப் பார்வையிட்டதன் விளைவாக, தமிழகத்தில் விபத்து பராமரிப்பு, தலைவாசலில் மிகப் பெரிய கால்நடை பண்ணை, மின்சார வாகன கொள்கைகள் போன்றவை மேம்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டோம்.

எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அம்மாவின் அரசு பேரிடர் காலத்திலேயே சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடுகளை ஈர்த்து வந்து சாதனை புரிந்தது. அதிலும் குறிப்பாக, 2020-ல் ஒரே நேரத்தில் டாடா, ஒலா போன்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இது குறித்த விபரங்களை எனது அறிக்கை மற்றும் பேட்டிகளின் வாயிலாக, அம்மா அரசின் சாதனைகளை பலமுறை விளக்கி உள்ளேன்.

குறிப்பாக, கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய வெளிநாட்டு - (பாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, இந்த விடியா திமுக அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய இத்தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்றுவிட்டது. இவ்வாறு தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்தால், 2030-ல் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியள் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால்தானே.

அதேபோல், ஃபாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை விடியா திமுக ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்றுவிட்டது. அதுமட்டுமல்ல, நமது மாநிலத்தில் பெரு முதலீடுகளை செய்திருக்கின்ற பாக்ஸ்கான் நிறுவனத்தின் சிஇஓ வந்த போது கூட விடியா அரசின் முதல்-அமைச்சர், அவர்களை சந்திக்காததன் விளைவாக, கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் முதலீடுகள் கர்நாடகாவிற்கும், தெலுங்கானாவிற்கும் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இப்படியாக, வெளி மாநிலங்களுக்குச் சென்ற முதலீடுகளையும், நிறுவனங்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச் சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர். 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்' என்பது போல், தமிழ் நாட்டில் தற்போது இயங்கும் பல நிறுவனங்களே தங்கள் முதலீடுகளை வேறு மாநிலங்களில் செய்து வருகின்றன. எனவேதான், இது முதலீட்டை ஈர்க்கும் பயணம் அல்ல, முதலீடு செய்யச் சென்ற சுற்றுலா என்ற சந்தேகம் வலுக்கிறது.

தமிழக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, ஏமாற்றி ஆட்சிக்கு வந்த உடனேயே தனது மனைவி, மகன், மருமகன் உள்ளிட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆடிட்டரோடு துபாய்க்கு குடும்ப பயணம் மேற்கொண்டார் விடியா அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். அங்கிருந்து திரும்பியதும் 6,000 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்ததாக வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'லூலூ மால்' உட்பட பல தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கி, பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மனம் போன போக்கில் அவிழ்த்துவிட்டார். துபாய் பயணம் முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும், சிறு முன்னேற்றம்கூட இல்லையே என்று நான் அறிக்கை வெளியிட்டதும், முன்னெடுப்புகள் நடந்து வருவதாக தொழில் துறை அமைச்சர் பெயரில் பசப்பு வார்த்தைகளால் அறிக்கை விடுகிறார்.

தமிழகத்தை தலை நிமிரச் செய்வோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த விடியா அரசு, தாங்கள் அடிக்கும் பகல் கொள்ளையையும், தவறுகளையும் மறைக்க இதுபோல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குப் பயணம் என்று தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கெனவே தொழில் செய்துவரும் நிறுவனங்களையும், மற்ற மாநிலங்களுக்குச் செல்லவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலேயே தொழில் தொடங்க வைக்குமாறு, திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரையும், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தொழில் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story