புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் - அண்ணாமலை
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை,
அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.