'மாற்றித்தான் அரசியலில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை' - பாஜக தலைவர் அண்ணாமலை


மாற்றித்தான் அரசியலில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை - பாஜக தலைவர் அண்ணாமலை
x

மாற்றித்தான் அரசியலில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

எனது எண்ண ஓட்டங்கள் சிலவை என் மனதில் உள்ளன. ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு தூய்மையான அரசியல் நடத்த நேரம் வந்துவிட்டது என்பது எனது ஆணித்தனமான நம்பிக்கை.

பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது தான் தூய்மையான அரசியலுக்கான அடித்தளம். பணம் கொடுத்து யார் எந்த தேர்தலை சந்தித்தாலும் நாங்கள் உண்ணதமான அரசியலை செய்கிறோம் என்று கூறினால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் பணம் இல்லாமல் ஒரு தேர்தல் சந்திக்க முடியாது எண்ண அளவிற்கு வந்துவிட்டது. அதில் ஒரு தரம் மட்டும் மாறியுள்ளது. ஆளும்கட்சியாக இருந்தால் இவ்வளவு... எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்து கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அளவிற்கு அரசியல் மாறியுள்ளது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. தனி மனிதனாகவும், பாஜக தொண்டனாகவும் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பாஜக மாநில தலைவராகவும் அதுபோன்று தேர்தலை சந்திக்க எனக்கு உடன்பாடு இல்லை.

நான் எந்த கட்சிக்கும் எதிராக இல்லை. எல்லா கட்சிகளுமே அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு எது சரி என்று நினைக்கிறார்களோ அவ்வாறு அரசியல் செய்கின்றனர். அவர்கள் செய்யும் அரசியல் நிலைப்பாடு தவறு என்று கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் இதுபோன்று அரசியல் செய்யக்கூடாது அதுபோன்று செய்ய வேண்டும் என்று கூற எனக்கு உரிமையில்லை.

2 ஆண்டு பாஜக தலைவராக பொறுப்பில் வகித்தபிறகு தமிழ்நாடு அரசியலை 2 ஆண்டுகள் உற்றுநோக்கியபிறகு அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்திற்கு, நேர்மையான அரசிலுக்கு தமிழ்நாடு மக்கள் காத்து இருக்கின்றனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த கட்சியுடன் கூட்டணியா? அந்த கட்சியுடன் கூட்டிணியா? என்பது குறித்து பேசுகின்ற ஆள் நான் கிடையாது. கூட்டணி குறித்து பேச இந்த நேரத்தில் எனக்கு அதிகாரமும் இல்லை. அதற்கான நேரம் விரைவில் வரும் அப்போது பேசுகிறேன்.

இப்படிப்பட்ட அரசியல் முன்னெடுப்பில் மட்டும்தான் என்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் எனக்கு இல்லை. அதில் மிக உறுதியாக இருக்கின்றேன். 2 ஆண்டு அரசியலை பார்த்தபின் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

அரசியல் என்பது நேர்மையாக, நாணயமாக பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற்றம் நடக்காது என்ற எண்ண ஓட்டத்திற்கு நான் வந்துவிட்டேன். அதை நான் என் கட்சிக்குள்ளும் பேச தொடங்கிவிட்டேன்.

வரும் காலங்களில் இன்னும் ஆக்ரோஷமாக நான் பேச உள்ளேன். கூட்டணி குறித்து அதற்கான நேரம் வரும்போது எங்கள் தலைவர்கள் கூறுவார்கள். மறுபடியும் கூறுகின்றேன் எந்த கட்சிக்கும் நான் எதிரி கிடையாது. யாருக்கும் எதிரி கிடையாது... எந்த தலைவருக்கும் எதிரி கிடையாது. என்னுடைய மனதில் என் வேலையை விட்டுவிட்டு உங்களைபோல ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று (பத்திரிக்கையாளர்கள்) வந்து நான் சில தவறுகளை செய்ய தயாராக இல்லை. அதன் அடிப்படையில் அன்று நான் சில வார்த்தைகளை பேசியிருந்தேன்.

நேரம் வரும்போது இன்னும் விவரமாக தீர்க்கமாக பேசுகிறேன். 2024 தேர்தலில் தனித்துபோட்டியா என்பது குறித்து நேரம் வரும்போது கூறுகிறோம்.

கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எனக்கு உரிமையில்லை. அதற்கு பாஜக நாடாளுமன்ற குழு உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு தேர்தலை நடத்த ஆகும் செலவு... நான் போலீசில் 9 ஆண்டுகள் சம்பாதித்த எல்லா பணமும் அரவக்குறிச்சி தேர்தலில் சென்றுவிட்டது. அது எல்லாம் நான் குருவி போல சிறுகசிறுக சேமித்துவைத்தது. டீசல் போடவேண்டும்... பெட்ரோல் போட வேண்டுமென்று பொய்விட்டது. தேர்தல் முடிந்தபின்னர் சத்தியமாக நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன்.

தமிழ்நாடு அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தல் என்றால் 80 கோடி ரூபாயில் இருந்து 120 கோடி ரூபாய் வரை பணம் செலவு செய்யவேண்டுமென்பது பொதுவான கணக்கு. எல்லா கட்சியும் பணம் கொடுக்கிறது என்று நான் கூறவில்லை.

இதை செய்துவிட்டு தூய்மையான அரசியல் என்று நீங்கள் பேச முடியாது. 2 ஆண்டு பார்த்துவிட்டேன்... எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் தூய்மையான அரசியலுக்கு தமிழ்நாடு மக்கள் தயாராக உள்ளது என்பது என் உள்மனதில் உள்ளது.

எங்கள் சார்பாக நிற்கும் வேட்பாளர் ஓட்டிற்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொடுக்கும்போது அதற்கும் வாக்குவங்கி உள்ளது. இது என் முழுமையான தனிப்பட்ட கருத்து.

நான் அரசியலில் இதற்கு மேலே இருக்க வேண்டும் இப்படி நான் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டுமென்றால் இந்த பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுக்க தொடங்கிவிட்டேன்.

நானும் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றி தான் அரசியலில் இருக்கவேண்டுமென்றால் அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

மக்களிடன் சென்று சிறுக சிறுக ஒவ்வொரு வாக்காக சேர்ந்தாலும் கூட சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல அது ஒரு பெரிய வெள்ளமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஏற்கனவே கூறியதுபோல நான் ஒரு சிறிய மனிதன்.

எந்த கட்சியை பற்றி குறை கூறவும் எனக்கு அதிகாரம் இல்லை. அந்தந்த கட்சி அவர்கள் யுக்தியின் படி அவர்கள் நடத்துகிறார்கள். அந்த கட்சி வெற்றிபெறுகிறது. எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள் முதல்-அமைச்சராக இருக்கின்றனர். அவர்களின் நுட்பம் வேலை செய்கிறது. அதைபற்றி குறைகூற எனக்கு உரிமையில்லை.

நானும் இதற்குள் குதித்து இப்படி மாறினால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அரசியல் வரவேண்டிய அவசியமில்லை... நான் வேறு வேலையை பார்த்திருப்பேன்' என்றார்.Next Story