அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை


அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை
x

அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடிவருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 26). இவர், அனகாபுத்தூர் மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், யோகேஸ்வரனை கடத்திச் சென்றனர்.

பின்னர் பொழிச்சலூர் அழைத்துச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து யோகேஸ்வரனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த யோகேஸ்வரன், நேற்று முன்தினம் கடத்தல்காரர்கள் அயர்ந்து தூங்கிய நேரத்தில் அங்கிருந்து தப்பி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபற்றி சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். அதில், "4 பேர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர். நான் பணம் தராததால் என்னை கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்து உதைத்தனர்" என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகேஸ்வரனை கடத்தியதாக அனகாபுத்தூரைச் சேர்ந்த டைசன் (28), பொழிச்சலூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story