பல் மருத்துவ கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
தள்ளுவண்டி கடையில் சாப்பிட்ட போது ஏற்பட்ட தகராறில் பல் மருத்துவ கல்லூரி மாணவரை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர், 2011-ம் ஆண்டு சென்னையில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். 6-9-2011 அன்று ராஜசேகர், தனது நண்பர்களுடன் சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிட சென்றார்.
அப்போது அதே கடைக்கு சாப்பிட வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மகிபன் (35), கொரட்டூரை சேர்ந்த பிரபு (23), பிரிட்டோ (23) ஆகியாருக்கும், ராஜசேகருக்கும் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த மகிபன், பிரபு இருவரும் சேர்ந்து ராஜசேகரை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிபன், பிரபு, பிரிட்டோ ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இதில் மகிபன், பிரபு ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், மகிபனுக்கு ரூ.7,500, பிரபுவுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரிட்டோவை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.