தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு


தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.

செங்கல்பட்டு

தமிழ்நாட்டில் பருவமழையாக இல்லாமல் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த மே மாதம் 4-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 460 கனஅடி வீதம் நீர்வந்து கொண்டிருக்கிறது.

அதனடிப்படையில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி (3.2 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் 460 கன அடியும், மழையால் 180 கனஅடி உள்பட 640 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் மூலம் 1,286 மில்லியன் கன அடி (1.2 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு 289 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 115 கன அடிநீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 220 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3) டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 781 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 2 ஆயிரத்து 228 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.) ஆக உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 202 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

ஆனால் குடிநீர் தேவைக்காக 31 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,649 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 530 மில்லியன் கன அடி (2.5 டி.எம்.சி.) இருப்பு இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 179 கன அடி நீர் வீதம் திறக்கப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் மழை என்றாலே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினரும் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரத்தை கண்காணிப்பது வழக்கம். அந்தவகையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,649 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. 24 அடி கொண்ட இந்த ஏரியில் 19.70 அடி நீர் இருப்பு உள்ளது. இதுகுறித்து தகவல் தறிந்ததும், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் வருகை தந்து ஏரியின் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு குறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, 'காஞ்சீபுரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. இதனை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

110 டி.எம்.சி. நீர் கையிருப்பு

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும். இந்த ஏரிகளில் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 364 மில்லியன் கன அடி (110.364 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. அதாவது 49.20 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. சுமார் 110 டி.எம்.சி. வரை ஏரிகளில் நீர் சேமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தொடர்ந்து மழை தீவிரமானால் நீர்தேக்கங்களின் நீர் இருப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

எனவே அனைத்து நீர்நிலைகளுக்கும் வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, நிலைமைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.


Next Story