இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்


இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
x
தினத்தந்தி 8 March 2024 3:16 AM GMT (Updated: 8 March 2024 3:32 AM GMT)

பிளஸ்-2 மாணவியை திருப்பூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி,

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பூதப்பாண்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் பூதப்பாண்டியில் தங்கியுள்ளார்.

கடந்த 19-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடினர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் மாணவி மாயமானதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை ஆரல்வாய்மொழி பாரதிநகரை சேர்ந்த தொழிலாளியான பிரகாஷ் (வயது 23) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிரகாசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பிரகாசின் செல்போன் எண் எந்த பகுதியில் இருக்கிறது? என்று ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் சிக்னல் திருப்பூரில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து திருப்பூருக்கு சென்று பிரகாசை பிடித்து மாணவியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் மாணவியும், பிரகாசும் திருப்பூரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து விட்டதை அறிந்த பிரகாசின் பெற்றோர் இதுபற்றி உடனே பிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பிரகாசும், அவரது பெற்றோரும் மாணவியை அழைத்து வந்து அவரது வீட்டு முன் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:-

பிளஸ்-2 மாணவி கீரிப்பாறையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றபோது பிரகாசும் வேலை விஷயமாக கீரிப்பாறை சென்றுள்ளார். அப்போது மாணவிக்கும், பிரகாசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியின் செல்போன் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐ.டி. ஆகியவற்றை பிரகாஷ் வாங்கியுள்ளார்.

பின்னர் நட்பாக பேசி பழகிய பிரகாஷ், மாணவியை காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 19-ந் தேதி திருப்பூருக்கு கடத்தி சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து மாணவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தேடுவதை அறிந்த அவர் நைசாக மாணவியை அழைத்து வந்து அவரது வீட்டின் முன் விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்ததால் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவி மாயம் தொடர்பான வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வழக்கை போக்சோ வழக்கமாக மாற்றி பிரகாசை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story