இடைநிற்றல் அதிகம் வரும்: தேசிய கல்விக் கொள்கையை சரியாக படித்துவிட்டுதான் எதிர்க்கிறோம்


இடைநிற்றல் அதிகம் வரும்: தேசிய கல்விக் கொள்கையை சரியாக படித்துவிட்டுதான் எதிர்க்கிறோம்
x

தேசிய கல்விக்கொள்கையால் இடைநிற்றல் அதிகம் வரும் என்றும், சரியாக படித்துவிட்டுதான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்றும் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

சென்னை

சென்னை நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலை கல்லூரியில் 46-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

ஆண்கள் கல்லூரியாக இருந்தாலும், முதுகலை படிப்பில் சில பெண்களும் படிக்கிறார்கள். பெண்கல்வி மட்டுமல்ல, உயர்கல்வியும் வளர வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் நோக்கம். எல்லாரும் உயர்கல்வியை படிக்க வேண்டும். ஒருகாலத்தில் இடைநிற்றல் அதிகம் இருந்தது. படித்துவிட்டு சென்றார்கள். தற்போது 3, 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று சொல்கிறார்கள். இதனால் இடைநிற்றல்தான் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டில் நம்முடைய கல்வித்திட்டத்தை உருவாக்க, மக்களுக்கு தேவை என்ன என உணர்ந்து, அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்க, பயிற்சி கொடுக்க மாநில கல்விக்கொள்கையை உருவாக்கும் பணிகள் நடக்கிறது.

மாணவர்கள் எப்போதும் வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. எங்கு இருந்தாலும் அவர்கள் பொதுஅறிவை, பயிற்சியை பெற வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகிறது. உயர்கல்வியில் எல்லாம் சிறப்பாக வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய கல்விக்கொள்கையை கல்வியாளர்கள், அறிவார்ந்தவர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் பேசியிருந்தார்.

இதுபற்றி அமைச்சர் பொன்முடியிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 'கவர்னர் தேசிய கல்விக்கொள்கையை பற்றி அவர் சொல்லியிருக்கிறார். தேசிய கல்விக்கொள்கையால் இடைநிற்றல் வரும் என்பதை முதல்-அமைச்சர் புரிந்து, ஒரு குழு அமைத்து, அதன் மூலம் ஆய்வு செய்து, புத்தகம் தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார். தேசிய கல்வி கொள்கையை சரியாக படிக்காமல் இல்லை. படித்துவிட்டுதான் தேசிய கல்வி கொள்கையில் எல்லாவற்றையும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது' என்றார்.


Next Story