'மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை'- ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு


மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவது இல்லை- ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
x

தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை,

மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த பத்து மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களது படகுகளும் மீன் பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 504 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரும், மீனவர் பிரதிநிதிகளும் பிரதமருக்குப் பலமுறை கடிதம் மூலமாகக் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை. தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாக ஆகிவிட்டது.

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முழுக்க தோல்வி அடைந்து விட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. மீனவர்களின் படகுகளையும் சிறையில் இருப்பவர்களை மீட்கவும் மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


Next Story