இன்று சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை


இன்று சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா: தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 Feb 2024 10:01 PM GMT (Updated: 11 Feb 2024 7:07 AM GMT)

'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்த நிலையில், யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று சென்னையில் யாத்திரையை முடிக்க தமிழக பா.ஜனதா திட்டமிட்டிருந்தது.

இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் சென்னையில் யாத்திரைக்கு போலீஸ் துறை அனுமதி மறுத்தது. அதே நேரத்தில், சென்னை சென்டிரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடத்த மட்டும் போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சென்னை பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இணை பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 'என் மண் என் மக்கள்' யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்கிறார்.

அந்த வகையில், ஜே.பி.நட்டா இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். 6.30 மணியளவில் மின்ட் சாலையில் சிறிது தூரம் நடந்தே சென்று பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

பின்னர், இரவு 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 8.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இரவு உணவு சாப்பிடுகிறார்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பா.ஜனதா தயாராகி வருவது, வியூகங்களை வகுப்பது, தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாகவும், தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக கேட்டறிய உள்ளார்.

இதையடுத்து, இரவு 9.15 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து 9.45 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் புறப்படுகிறார்.


Next Story