தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு


தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
x

கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி தீனதயாள் உபாத்யாயா எழுதிய நூல்களின் தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, 'காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது' என்று பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் கவர்னரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, எல்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல்வாதியாக இருக்கக்கூடாது

பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரல் மார்க்ஸ் யார் என்பதை கவர்னர் முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, காரல் மார்க்ஸ் பற்றி எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன் எழுதிய 'இளையோருக்கு மார்க்ஸ் கதை' என்ற புத்தகத்தை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்ப உள்ளோம். குழந்தைகளுக்கான இந்த புத்தகத்தை படித்த பின்னராவது கவர்னர், காரல் மார்க்ஸ் பற்றியும், மார்க்சியம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.என்.ரவி கவர்னராக இருக்க வேண்டுமே தவிர அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. மார்க்சை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அவருக்கு கிடையாது.

காரல் மார்க்ஸ் இந்தியாவுக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றாலும், 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே பிரிட்டிஷ் ஆட்சி குறித்து எழுதியவர். இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர். ஆனால், இவர்கள் வழிபடும் சாவர்கர் ஆங்கிலேயர்களிடம் உங்களுக்கு சேவை செய்கிறேன் என்று கடிதம் எழுதியவர். எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாரிசாக இருக்கும் கவர்னர், காரல் மார்க்ஸ் பற்றி பேச அருகதை இல்லை.

எந்த மூலைக்கு சென்றாலும்...

கவர்னர் தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இதற்கு மேல் அவர் தமிழ்நாட்டின் கவர்னராக தொடரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story