நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்ல சூளுரைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது கருணாநிதி நமக்கு கற்றுக்கொடுத்த முழக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்,
தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, சேலம் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மொழியை அழித்து, தமிழ் பண்பாட்டை அழித்து, மாநில மதிப்பை அழித்து, அதன் மூலம் தமிழினத்தை அழித்து நம்மை அடையாளமற்றவர்களாக மாற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மற்றொரு பக்கம் 10 ஆண்டுகளில் தமிழகத்தை எல்லா வகையிலும் அ.தி.மு.க. பாழ்படுத்தியது.
பா.ஜனதா-அ.தி.மு.க. இருவரின் படுபாதக செயல்களை தடுக்க வேண்டியதே நம் முக்கிய கடமை. மாநில சுயாட்சி கோரிக்கையை பொறுத்தவரையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை.
மாநிலங்களுக்கு போதுமான அதிகாரத்தை வழங்கிவிட்டு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைபாட்டை பாதுகாக்க எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அதை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் போதும். இதற்காகத்தான் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு ராஜமன்னார் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பெற்று தமிழக சட்டபையில் விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றினார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது கருணாநிதி நமக்கு கற்றுக்கொடுத்த முழக்கம்.
இந்த முழக்கம், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது. தேர்தலுக்கு பிறகு அமையும் இந்தியா கூட்டணி ஆட்சி மாநிலங்களுக்கு உரிமைகளை வழங்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்.
தமிழகத்துக்காக மட்டும் நாம் மாநில உரிமைகளை கேட்கவில்லை. மற்ற மாநிலங்களில் ஆளக்கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஏன் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் மாநில சுயாட்சி வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என்றே கேட்கிறோம்.
மத்திய அரசுக்கு பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்களாக மாநிலங்களை மாற்றிவிட்டனர். மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலத்தில் கூட நமக்கு உதவி செய்வது கிடையாது. சமீபத்தில் வந்த பேரிடருக்கு ரூ.37 ஆயிரம் கோடி பணம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை.
திருக்குறளை சொன்னால் போதும், பொங்கலை கொண்டாடினால் போதும், அயோத்தியில் கோவில் கட்டினால் போதும் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண், அண்ணாவின் மண், கருணாநிதியின் மண். மோடி 2 முறை பிரதமராகி உள்ளார். 2 முறையும் தமிழக மக்கள் அவரை பிரதமராக்க வாக்கு அளிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்கு அளிக்கபோவது கிடையாது.
நாற்பதும் நமதே நாடும் நமதே என்று நாளை முதல் புறப்படுங்கள். வரும் 3 மாதங்களில் நீங்கள் உழைக்கும் உழைப்பில் தான் இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு எதிர்காலம் அடங்கியிருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள். நம் அனைவரின் ஒற்றை நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது, இந்தியாவை வெல்வது. இதுதான் சேலம் மண்ணில் நின்று இந்த நாட்டுக்கு நான் சொல்லும் செய்தி.
உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள் தான். உங்கள் ஒவ்வொருவரையும் என் மகனாக, கட்சியின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். உங்கள் அனைவரையுமே இங்கிருந்தபடி அரவணைத்து அணைத்து கொள்கிறேன். உங்களால் நான் இப்போது, லட்சம் பேரின் சக்தியை பெற்றுவிட்டேன். சேலத்தில் சூளுரைப்போம். சேர்ந்து எழுவோம். இந்தியா கூட்டணி வெல்லட்டும். அதனை காலம் சொல்லட்டும். நாடும் நமதே, நாற்பதும் நமதே.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.