மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x

மாமியாரை கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு கீதா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆறுமுகம் நாள்தோறும் மது குடித்துவிட்டு தனது மனைவி கீதாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மது குடித்துவிட்டு வந்த ஆறுமுகம் கீதாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கீதா காஞ்சீபுரம் காமாட்சி நகரில் உள்ள தனது தாய் சித்ராவின் வீட்டுக்கு சென்றார்.

தொடர்ந்து அங்கு வந்த ஆறுமுகம் கீதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது ஆறுமுகத்திற்கும் மாமியார் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற மைத்துனர் உதயகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார்.

இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.


Next Story