வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்
x

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வாக்காளர்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் https:/www.nvsp.in/ இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும், தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், பான் கார்டு போன்ற 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம்.

2023-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளில் பணிகள் நடைபெற உள்ளது. எனவே தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், தகுதியில்லாத வாக்காளர்களை நீக்கவும், சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்காளராக பெயர் சேர்க்க முன்னதாகவே பதிவு செய்யலாம். அவர்கள் 18 வயது பூர்த்தி செய்யும் காலாண்டு முடிவில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால் 18 வயது நிரம்பியவர்கள் ஒரு வருடத்திற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே மக்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story