கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்


கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 25 Sep 2023 9:17 PM GMT (Updated: 25 Sep 2023 10:05 PM GMT)
தஞ்சாவூர்

கும்பகோணம்:

அறுவடை பணிகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மக்காச் சோளம் 3 கதிர் ரூ.50-க்கு விற்பனையானது.

மக்காச்சோளம்

தஞ்சையில் முக்கிய சாகுபடி பயிர் நெல். இருப்பினும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்காச்சோளம், கம்பு போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மாற்றுப்பயிராக இதை விவசாயிகள் பயிரிட்டு வருவதால் குறிப்பிட்ட லாபத்தை ஈட்டி வருகின்றனர். கும்பகோணம் கோட்டத்தில் குருகூர், ஆனூர் மேலானமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களாச் சோளம் பயிரிடப்படுகிறது.

மக்காச்சோளம் சாகுபடிக்கு குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு போதுமானதாக உள்ளது. கோழி தீவனத்துக்கு மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மக்காச்சோளத்தை கோழிப்பண்ணை உரிமையாளர்கள், வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மக்காச்சோளம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

3 கதிர் ரூ.50-க்கு விற்பனை

தற்போது கும்பகோணத்தில் மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது. குருகூர், ஆனூர் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகளிடம் இருந்து மூட்டை மூட்டையாக மக்காச்சோளத்தை வாங்கி வந்து கும்பகோணத்தில் புறவழிச்சாலைகள், மேம்பாலம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஸ்வீட் கான் என்று சொல்லகூடிய மக்காச்சோளம் 2 கதிர் ரூ.50-க்கும், சாதாரண மக்காசோளம் 3 கதிர் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கும்பகோணத்தில் ஒரு சில வியாபாரிகள் மட்டுமே மக்காச்சோளம் விற்பனை செய்கின்றனர்.

பெரும்பாலும் விவசாயிகளே மக்காச்சோளத்தை விற்பனை செய்கின்றனர். தங்களின் விளைநிலங்களில் உற்பத்தியான மக்காச்சோளத்தை அறுவடை செய்து அவற்றை வெளியூர்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

அறுவடை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-தற்போது மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது. மழை மற்றும் பூச்சி தாக்குதலால் மக்காச்சோளம் பாதித்தது. தற்போது வியாபாரிகள் மக்காச்சோளத்தை வாங்கி விற்பனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் மக்காச்சோளம் வயலில் வீணாகி விட கூடாது என்பதற்காக நாங்களே அறுவடை செய்து அதை விற்பனை செய்து வருகிறோம். இதில் எங்களுக்கு போதிய அளவு லாபம் கிடைக்கவில்லை. இருப்பினும் சோளம் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக விற்பனையில் ஈடுபட்டு உள்ளோம்.



Next Story