உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும்- பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும்- பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி தொடர உதவ வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

உக்ரைனில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கல்வி பயில இடம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதை சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிலைப்பாடு மாணவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை நாட்டிற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கலாம் என வெளிவிவகார மக்களவைக் குழு பரிந்துரைத்தது மாணவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு எடுத்துள்ள இதற்கு மாறான நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதுபோன்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது கடினம் என்று கருதினால், ஒரே நேரத்தில் கூடுதல் இடங்களை உருவாக்கி தனியார் கல்லூரிகளில் சேர அனுமதிக்கலாம். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதே அளவிலான கட்டணத்தைச் செலுத்தி கல்வியைத் தொடர முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக உரிய கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Next Story