நேரில் சந்திப்பது பிரச்சினை இல்லை, தமிழக வளர்ச்சிக்காக கவர்னர் மனம் மாற வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நேரில் சந்திப்பது பிரச்சினை இல்லை, தமிழக வளர்ச்சிக்காக கவர்னர் மனம் மாற வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Dec 2023 2:15 AM IST (Updated: 17 Dec 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கான 3-வது முழுமைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக வளர்ச்சிக்காக கவர்னர் மனம் மாற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

மிக்ஜம் புயல் தொடர்பாக சரியான நேரத்தில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்தியக்குழுவும், அரசியல் கொள்கை முரண்பாடுகளையும் தாண்டி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும் பாராட்டியுள்ளனர்.

செம்பரம்பாக்கத்தில் 2015-ம் ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை. ஏரியைத் திறந்து விடுவதற்கான அனுமதியை ஜெயலலிதாவிடம் வாங்க நாள்கணக்கில் அதிகாரிகள் காத்திருந்தார்கள். ஆனால் இப்போது உரிய நேரத்தில் தண்ணீரைப் படிப்படியாக திறந்து விட்டு, தயார் நிலையில் இருந்தோம். ஆனாலும் வெள்ளம் அதிகமாக வரக் காரணம், மழையின் அளவு அதிகமாக இருந்ததுதான்.

47 ஆண்டுகளில் பெய்யாத மழை அது. 177 ஆண்டுகளில் 3-வது பெரிய மழை. கடல் மட்டம் உயர்ந்து இருந்ததால் அதுவும் தண்ணீரை உள்வாங்கவில்லை. எனவேதான் சென்னையில் தண்ணீர் அதிகம் தேங்கியது.

காலநிலை மாற்றம்தான் நாம் எதிர்கொள்ளப் போகும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது. எனவே மக்கள் தொகையின் அடர்த்தி, மழையின் அளவு, புயல் சீற்றங்கள், வடிகால் கொள்ளளவு, வெள்ளச் சமவெளிகள், கடல் மட்டம், புவி வெப்பமயமாதல் ஆகிய அனைத்தையும் மனதில் வைத்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

புறநகர்ப் பகுதிகளில் திட்டமிடப்படாத கட்டுமானப் பணிகள் பெருகியதோடு, நீர் வடிவதற்கு வசதியை உருவாக்காமல் அவற்றுக்கு அனுமதி அளித்ததுதான் வீடுகளில் வெள்ளம் புகுந்ததற்கு காரணமா? என்று கேட்டால், 2011-2021 ஆண்டுகளில் எந்தப் பணியையும் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு செய்யவில்லை. அதன் விளைவுகளைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த தி.மு.க. ஆட்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக்குழு அமைத்து அவர்களது ஆலோசனைப்படி திட்டங்களை தீட்டி வருகிறோம்.ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதால், தியாகராய நகர், அசோக் நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், புளியந்தோப்பு போன்ற பல பகுதிகளில் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 68 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதால் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மக்கள் பயன் அடைவார்கள்.

கோவளம் வடிநிலப்பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நங்கநல்லூர், கண்ணன் காலனி, மயிலை பாலாஜி நகர், புவனேஸ்வரி நகர், புழுதிவாக்கம், கண்ணகி நகர், எம்.சி.என். நகர் மற்றும் துரைப்பாக்கம் பகுதி மக்கள் பயன் அடைவார்கள். மீதமுள்ள பணிகள் நிறைவேற்றப்படும்போது, இந்திரா நகர், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, செம்மஞ்சேரி உள்ளிட்ட சென்னையின் தென்பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவேறும்போது, சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் பெருமளவு குறைக்கப்பட்டுவிடும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிகமிக அவசியமானதாகும். சென்னைக்கான 3-வது முழுமைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்குள் அது வெளியிடப்படும். அதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும். நீர்ப்பிடிப்பு மிக்க நெல்வயல்கள் குடியிருப்புகளாக மாறுவதை தடுப்பது பற்றி 3-வது முழுமைத் திட்டத்தை வடிவமைக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு சொன்னபடி கவர்னரும் நானும் நேரில் சந்திப்பது பிரச்சினை அல்ல. அவர் மனம் மாறி தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. சில சக்திகளின் கைப்பாவையாக செயல்படுவதை தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

3 மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த 3 மாநில வெற்றியை பா.ஜனதா பெற்றிருக்க முடியாது. அதை படிப்பினையாகவே பார்க்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை இந்தியா கூட்டணி செய்யும்.

திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சிகள், பேரிடர் களத்திலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் ஈடுபடவில்லை. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அத்திட்டங்களின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் எங்கள் அரசு பொதுவெளியில் வெளியிடும்.

இந்த இரண்டரை ஆண்டுகளில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.


Next Story