திண்டுக்கல் லியோனியின் பாடலை கேட்டு வயிறு குலுங்க சிரித்த அமைச்சர் உதயநிதி


திண்டுக்கல் லியோனியின் பாடலை கேட்டு வயிறு குலுங்க சிரித்த அமைச்சர் உதயநிதி
x
தினத்தந்தி 21 Jan 2024 11:21 AM GMT (Updated: 21 Jan 2024 11:22 AM GMT)

ஆரிய கலாசாரத்திற்கு முடிவு கட்டுகிற மாநாடு தான் இந்த இளைஞரணி மாநாடு என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.

சேலம்,

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி பாடல்களை பாடி நகைச்சுவையாக பேசினார். அவரது பேச்சை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மேடையிலிருந்த அனைவரும் சிரித்து ரசித்தனர். லியோனி பேசியதாவது:-

பாஜகவும் அதிமுகவும் ஏன் சேர்ந்து இருந்தார்கள் ஏன் விலகினார்கள் என்பது அதிமுக தொண்டர்கள் யாருக்கும் தெரியாது. ஏன் கூட்டணி சேர்ந்திருந்தோம் ஏன் கூட்டணியில் இருந்து விலகினோம் என்று தெரியாமல் இருக்கும் கூட்டணிகளுக்கு மத்தியில் கூட்டணி கட்சியை தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் உருவாக்கக்கூடிய ஆற்றல் உள்ள ஒரே தலைவர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான்.

இன்று கலாச்சார திருட்டு நடைபெற்று வருகிறது. திருவள்ளுவரை திடீரென காவி நிறத்தில் கொண்டு வந்து கவர்னர் கொடுக்கிறார். வள்ளலாரை சனாதனத்தின் தூதுவன் என்று சொல்லுகிறார். ஜல்லிக்கட்டு சனாதன விளையாட்டு என்று மத்திய நிதி மந்திரி சொல்கிறார். இது போன்ற கலாச்சார திருட்டு வாக்கியங்களை வெளியிட்டு நம் கவனத்தை திசை திருப்புகிற இந்த ஆரிய கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுகிற மாநாடு தான் இந்த இளைஞரணி மாநாடு.

பாசிச கூரையில் மதவெறி தீ பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. பாகப்பிரிவினை நடக்கும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த பாசிச தீயை அணைத்து அனைவரையும் ஒன்று சேர்த்து இன்று இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் நம் தலைவர். முதல்-அமைச்சர் ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர்தான் இந்த நாட்டின் பிரதமர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story