தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தீவிர வாகன சோதனையில் பறக்கும்படை


தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தீவிர வாகன சோதனையில் பறக்கும்படை
x
தினத்தந்தி 16 March 2024 9:48 PM IST (Updated: 16 March 2024 9:48 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து தேர்தல் பறக்கும்படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வரும் 20ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதையடுத்து, ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. வாகனங்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தால் அதை அகற்றும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story